பெருந்தோட்டங்களில் அவுட்குரோவர் முறை தொடர்பில் தொழில் அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும்/ திலகர் எம்.பி


பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அவுட்குரோவர் முறையை முறையற்ற வகையில் அமுல்படுத்தி வருவதனால் தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

ஊழியர் சேமலாப நிதி உட்பட அவர்களது தொழில் உரிமைகளும் பாதிப்படைகின்றன.

எனவே, தொழில் அமைச்சு இந்த விடயத்தில் தலையிட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் மீதான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…..

தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் சம்பந்தமாக அரச பொறுப்பில் உள்ள தோடடங்களில் மாத்திரமே நிலுவைகள் இருப்பதாகவும் அவையும் இப்போது முறையாக செலுத்தப்பட்டு வருவதாகவும் தொழில் ராஜாங்க அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

ஆனால், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் இயக்கும் தனியார் தோட்டங்கள் பலவற்றிலும் ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படாமை தொடர்பில் தொழிலாளர்கள் தரப்பில் குற்றஞ் சாட்டப்படுகின்றது என்பதை ராஜாங்க அமைச்சருக்க நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

குறிப்பாக அவுட்குராவர் முறை பின்பற்றப்படும் பெருந்தோட்ட கம்பனிகளில் இந்த நிலைமை காணப்படுகின்றது.

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் தற்போதைய கூட்டு உடன்படிக்கை விதிமுறைகளுக்கு முரணாக அவுட்குரோவர் என்ற முறையை தோட்ட நிர்வாகத்தினுள் நடைமுறைப்படுத்தி வருவதை தொழில் அமைச்சர் அறிவாரா என நான் பாராளுமன்ற கேள்வி பதில் நேரத்தில் எழுப்பிய வினாவுக்கு தொழில் அமைச்சர் இது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என சபைக்கு பதில் வழங்கியுள்ளார்.

அதேநேரம் கூட்டு உடன்படிக்கையின்படி அத்தகைய முறை ஒன்றை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை எனவும் பதில் அளித்துள்ளார்.

ஆனால், பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் அவுட்குராவர் முறையையும் உப குத்தகை முறையையும் கையாண்டு வருகின்றன.

இதனால் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமின்றி தோட்டசேவையாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட பிளாண்டேசன் நிறுவனத்தினால் மகாஊவ போன்ற தோட்டங்களில் அவுட்குராவர் முறைமை முறையற்ற விதத்தில் அமுல்ப்படுத்தப்பட்டு வருவதோடு தோட்டங்கள் உப குத்தகை முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனால், தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு முறையாக சென்று சேர வேண்டிய ஊழியர் சேலாபநிதி கொடுப்பனவுகளும் சென்று சேர்வதில்லை.

இது தொடர்பில் தொழில் அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோளை முன்வைத்தார்.

இதன்போது குறுக்கிட்ட தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன அவுட்குரோவர் முறையினால் தொழிலாளர்கள் பாதிப்படைவதனை ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால், அத்தகைய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பெருந்தோட்ட அமைச்சே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பதிலளித்தார்.

அமைச்சரின் பதிலை செவிமடுத்த பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் பெருந்தோட்டத் துறை அமைச்சர் நடாத்திய கலந்துரையாடல்களில் நாம் கலந்துகொண்டோம்.

அது முழுமையான கலந்துரையாடலாக அமையவில்லை.

அதற்கு முன்பதாகவே பெருந்தோட்டக் கம்பனிகள் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன.

அரச பொறுப்பில் உள்ள கூட்டுத்தாபனங்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முன்வைக்கும் யோசனைகளில் இருந்து பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் முன்மொழிவுகள் வேறுபடுகின்றன.

இதனை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மாத்திரம் கையாள முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் சம்பந்தமாக தொழில் அமைச்சு மத்தியஸ்தம் வகிப்பதுபோல இந்த முறைமை தொடர்பிலும் தொழில் அமைச்சின் தலையீடு அவசியம்.

இது தனியே தொழில் சார்ந்த பிரச்சினை மாத்திரமல்ல ஆயிரக் கணக்காண தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதை தொழில் அமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *