பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட இடங்கள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பொருட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் பிரதான கட்சிகளின் பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் கோங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அத்துடன் சுயேட்சை குழுக்களின் பல வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால், வெலிகம நகர சபை, மஹரகம நகர சபை, பாணந்துறை நகரசபை மற்றும் அகலவத்தை பிரதேச சபை, பதுளை மற்றும் மஹியங்கனை பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காரணங்களுக்காக இவ்வாறு நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ பிரதேச சபைகளுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியால் சமர்ப்பிக்கப்படாமையே குறித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஆக்கரைப்பற்று மாநாகர சபைக்காக அகில இலங்கை தமிழ் கோங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச சபைக்காக தமிழர் விடுதலை கூட்டணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

நாவிதன்வெளி பிரதேசசபைக்காக சுயாதீன குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், தலவாக்கலை நகர சபைக்காக சுயாதீன குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, 93 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலம் இன்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் எதிர்ப்புக்களைத் தெரிவிக்க ஒரு மணித்தியாலயம் வழங்கப்பட்டது.

பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் வேட்புமனுக்கள், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 93 குறித்த உள்ளாட்சி நிறுவனங்களுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்துவதங்கான நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வந்தது.

இதற்கமைய, அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் சார்பில் 557 கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நன்றி சூரியன்

அஞ்சல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *