கட்டுரை/ உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதா இல்லையா? – அரசாங்கத்துக்குள் போட்டி

இலங்கையில் உள்ள 340 உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல் ஒரு வருடத்துக்கும் மேலாக நடத்தப்படாமல் இருக்கிறது.

தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை அடைந்த நிலையில், அண்மையில் வெளியாக்கப்பட்ட உள்ளாட்சி எல்லைகளின் மீளமைப்பு வர்த்தமானி குறித்த இடைக்கால தடையால், தேர்தல் மீண்டும் சிக்கலுக்குள்ளானது.

இதனால் ஜனவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேர்தல், மேலும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தேர்தல் மேலும் பிற்போக ஏதுவான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டமையால், உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் தேர்தல் தாமதிக்கின்றமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற குற்றச்சாட்டை மகிந்த அணி, ஜேவிபி உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து நடத்தும் கூட்டு அரசாங்கத்தில், ஒரு பிரிவு தேர்தலை நடத்த வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்து வருகிறது.

இன்னொரு பிரிவு தேர்தலை நடத்தக்கூடாது என்று அறிவிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக அதனை தாமப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி, விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

தற்போது இருக்கின்ற பெரும்பான்மைக் கட்சிகளில், ஐக்கிய தேசிய கட்சிக்கான மக்கள் அலை அதிகம் இருப்பது.

இந்த அலை, காலம் ஆகஆக குறைவடையலாம் என்ற கவலை அந்த கட்சிக்கு இருக்கிறது.

இன்னொருவிடயம், சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து மகிந்த அணி தனித்து செல்கின்றமையானது, ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கும் மிகப்பெரிய சாதக நிலைமையாகும்.

பிளவடைந்த இரண்டுத் தரப்பும் ஒன்று சேர்வதற்கு முன்னதாகவே, முழு பலத்தையும் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

உள்ளாட்சி மன்றம் என்பது, அடுத்தடுத்து வரக்கூடிய மாகாண சபைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான மிகமுக்கிய அடித்தளமாக அமையும்.

உள்ளாட்சி தேர்தலின் வெற்றியானது, மேற்சொன்ன ஏனைய தேர்தல்களின் வெற்றியை ஐக்கிய தேசிய கட்சிக்கு உறுதி செய்வதாக அமையும்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவான சிறிலங்கா சுதந்திர கட்சித் தரப்பில், தேர்தலுக்கு தயாரில்லாத நிலை உள்ளது.

அதற்கு பிரதான காரணம், நாளாந்தம் மேலோங்கும் மகிந்த அணியினருக்கான வாக்காளர் ஆதரவு.

சுதந்திர கட்சி, உள்ளாட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டால், ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரம் அன்றி, மகிந்த அணி மற்றும் ஜே வி பி ஆகிய கட்சிகளுடனும், சிறுபான்மை கட்சிகளுடனும் மிகப்பெரிய சவாலுக்கு முகம் கொடுக்க நேரும்.

எனவே நான்காம் நிலை கட்சியாக சுதந்திர கட்சியின் மைத்திரி பிரிவு மாற வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இடையில் உள்ளது.

இதனாலேயே திட்டமிட்டு இந்த தேர்தலை பிற்போட்டு வருவதாக எதிரணிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

தற்போது உள்ளாட்சி எல்லை தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்புக்கு விதிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையினால், உள்ளாட்சித் தேர்தலை ஒன்றாக ஜனவரி மாதம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த இடைக்கால தடையால் பாதிப்பு ஏற்படாத 93 உள்ளாட்சி மன்றங்களுக்கு மாத்திரம் விரைவில் தேர்தலை நடத்துவதற்கான முடிவை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

ஒன்றாக அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியே, முன்பிருந்தே இந்த தேர்தல் தாமப்படுத்தப்பட்டும், உள்ளாட்சி மன்றங்கள் விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டும் இருந்தன.

தொடர்ந்தும் இதனைக் காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவதானது, ஜனநாயக விரோதமான செயல் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருக்கிறார்.

ஆனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இவ்வாறு தேர்தலை துண்டுத்துண்டாக நடத்துவதனை விரும்பவில்லை.

நீதிமன்றத்தின் இடைக்கால தடையினால் பாதிக்கப்படாத மற்றும் தேர்தல் நடத்தக்கூடிய உள்ளாட்சி மன்றங்களில் பெரும்பாலானவை, மகிந்த அணியினர் பலமாக உள்ள சிங்கள கிராமங்களைச் சார்ந்தவை என்று கூறப்படுகிறது.

எனவே அவற்றுக்கு மாத்திரம் முன்கூட்டியே தேர்தல் நடத்தினால், அவற்றில் மகிந்த அணி வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இது நடப்பு அரசாங்கத்துக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமையும்.

இந்த தேர்தலில் மகிந்த அணி அதிகூடிய உள்ளாட்சி மன்றங்களை வென்றால், எஞ்சியுள்ள தேர்தல்களின் போது, மகிந்த அணியை நோக்கி மக்கள் அலை நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பிரதமர் கருதுகிறார்.

இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர்களை அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, புதிய தேர்தல் முறைமையை இல்லாது செய்து, பழைய முறையிலேயே அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை பிரதமர் முன்வைத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஒருவர் இந்த தகவலை எமக்கு வழங்கினார்.

இதற்காக, புதிய தேர்தல் முறைமையை நீக்கவும், பழைய முறையிலேயே தேர்தலை நடத்தவும் நாடாளுமன்றத்தில் விசேட சட்டமூலம் ஒன்றை முன்வைக்கவும் ரணில் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பழைய முறையிலேனும் தேர்தலை நடத்துமாறு மகிந்த அணி கோரி வருகின்ற நிலையில், இதுதொடர்பான சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட்டால், அதற்கு நாடாளுமன்றத்தில் மகிந்த அணி ஒத்துழைப்பு வழங்கும் என்று நம்பலாம்.

ஆனால் இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் ஒத்துழைப்பை வழங்குவார்களா? என்பது சந்தேகமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *