ஏ.ஆர்.வி.லோஷன்/ இந்திய எதிர் டெஸ்ட்: இலங்கைக்கு இருக்கும் சாதகங்கள்


இலங்கை இந்தியா கடந்த காலம்

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான 2009 பருவகால டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு முந்திய சில தொடர்களை பொறுத்த வரையில் இலங்கையின் ஆதிக்கம் போட்டியின் முதல் இன்னிங்ஸில்; எப்போதும் மேலோங்கியதாக இருக்கும்.
இலங்கை அணியின் பந்து வீச்சும் மிகச் சிறந்ததாக இருந்து வந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கையின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை கொடுப்பதும், பின்னர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதுமாக இருக்கும்.
ஆனால் இந்த நிலைமை தற்போது வேறுவிதமாக மாற்றம் அடைந்துள்ளது.
இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் ஒரு தொடர் ஆரம்பிக்கும் போது பாரிய உத்வேகத்துடன் விளையாட ஆரம்பிக்கும்.
அது படிப்படியாக குறைவடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்காலம்.
இதற்கு பிரதான காரணம் இலங்கை அணி வீரர்களினால் டெஸ்ட் போட்டி ஒன்றின் முதல் 3 நாட்கள் வெளிப்படுத்தும் திறமையின் அளவிற்கு இறுதி இருநாட்களில் வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகும்.

இரண்டாம் இன்னிங்ஸின் நம்பிக்கை வீரர்கள்

குறிப்பாக தற்போதைய வீரர்களில் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகிய முன்று வீரர்கள் மாத்திரமே இரண்டாவது இன்னிங்ஸில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.
மற்றைய வீரர்களிடம் ஆற்றல் குறைவு அல்லது அனுபவக்குறைவு போன்ற காரணங்களால், அவர்களின் போராட்டத்திறன் குறைவாக உள்ளது.
இந்த காரணத்தினால் இலங்கை அணியினால் இறுதிவரையில் போரடமுடியாதுள்ளது.
முன்னர் அர்ஜூன ரணத்துங்க, மஹேலஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்கார போன்ற வீரர்கள் அணில் இருந்த போது இதுபோன்ற நிலை இருந்ததில்லை.
அந்த காலத்தில் அணியில் ஒருவர் ‘நின்றுபிடித்து’ தமது அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தும் வகையில் செயற்படுவார்.
ஆனால் தற்போது அவ்வாறான ஒரு வீரர் இலங்கை அணியில் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது.

வேகப்பந்தும் – சுழற்பந்தும்

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் நம்பிக்கை அளிக்க கூடிய விடயமாக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சளைக்காது பந்து வீசியமையை கூறலாம்.
இந்திய அணியினருக்கு எதிரான அச்சுறுத்தலான பந்து வீச்சாளர்களையும் இதன் போது அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய  சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இருப்பினும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு போதுமான நம்பிக்கை நிறைவடைந்த போட்டியில் கிடைக்காமை, அடுத்த போட்டியில் இலங்கை அணிக்கு அது பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என்று எண்ணத் தோன்றுகிறது.
எனினும் இந்தியா, தென்னாபிரிக்காவின் தொடரை கருத்திற்கொண்டு, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்குகிறது.
இது இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சற்று சாதகமாக அமையும்.
காரணம், கடந்த இந்தியா, பாகிஸ்தான், சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது இலங்கை அணி சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சற்று தடுமாற்றத்தை சந்தித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
சுழற்பந்து வீச்சுக்கு பெயர் போன இலங்கை அணிக்கு, இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ள வருத்தப்பட வேண்டிய விடயமாகும்.
அத்துடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் பவுன்ஸர் பந்துகள் வீசப்படுவது சற்று குறைவு.
இது இலங்கைக்கு சற்று சாதகமாக அமைந்திருந்தாலும், கடந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் வேகம் இலங்கை அணியினரை விட சற்று அதிகமாகவே இருந்தது.
அடுத்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ் குமார் இல்லாமையும் இலங்கை அணிக்கு கிடைக்கும் மற்றுமொரு சாதக வாய்ப்பாகும்.
மத்தியூஸ் மற்றும் திரிமான்னே ஆகியோரின் துடுப்பாட்டம் மட்டுமே இலங்கைக்கு தற்போது வாய்ப்பாக உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர், ஏனையோரின் துடுப்பாட்டம் குறித்து திருப்தி அடைய முடியவில்லை.

அடுத்த அணித் தலைவர் உருவாகிறாரா?

நிரோஷன் திக்வெல்லவின் வடிவில் குமார் சங்கக்காரவை ஒத்த ஆக்ரோசமான விக்கட் காப்பாளர் ஒருவரை பார்க்க முடிகிறது.
அதேநேரம் அவர் மிகவும் அவதானிப்பு மிக்கவராகவும், போட்டி விதிமுறைகள், ஆட்டமிழப்புகள் குறித்த மேலதிக அறிவினை உடையவராகவும் இருக்கிறார்.
எனவே அவரிடம் எதிர்கால அணித் தலைவருக்கான தகுதிகளைக் காணக்கூடியதாக உள்ளது.
அவர் குறித்து அணித் தேர்வாளர்கள் உரிய அவதானத்தை செலுத்தினால், இலங்கை அணிக்கு எதிர்காலத் தலைவர் ஒருவரை இப்போதிருந்தே செதுக்க முடியும் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

அணித் தேர்வு குழு அவதானம் செலுத்த வேண்டியவை.

இலங்கை அணியின் அணித்தேர்வு குழு சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அடுத்த போட்டிக்கான அணித்தெரிவில் என்னென்ன வலுசேர்க்க முடியும் என்பதில் தெரிவுக் குழு அவதானம் செலுத்த வேண்டும்.
தனஞ்யச டி சில்வாவிற்கு அணியில் இடமளிக்கப்படுமா? லஹிரு கமகேவிற்கான வாய்ப்பு தொடருமா? அல்லது தசுன் சானக்கவை முழுநேர பந்துவீச்சாளராக அல்லது துடுப்பாட்ட வீரராக பயன்படுத்துவதா? அல்லது சகலதுறை வீரராக பயன்படுத்துவதா? போன்ற விடயங்களை தீர்மானிக்க வேண்டும்.

அஞ்சலோ மெத்தீவ்ஸின் பங்கு

மெத்தியூஸின் பந்து வீச்சும் இலங்கை அணிக்கு அவசியப்படுகிறது.
அவர் பந்துவீசுவாராக இருந்தால், அணியின் பந்து வீச்சு பிரிவுக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
அவர் பந்து வீசாமை இலங்கை அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமைகிறது.
இருந்தாலும், அவர் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்துவதும், இலங்கை அணிக்கு தற்போதைக்கு வாய்ப்பாக இருக்கிறது.
ஆனால் அவர் கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்காமை இலங்கை அணிக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *