அமைச்சர் திகாம்பரத்தின் பாதீட்டு உரை

சபாநாயகர் அவர்களே……..

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவு திட்ட விவாதத்தில் எனது அமைச்சு மீதான அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

இலங்கையில் வாழ்கின்ற ஏறத்தாழ 15 லட்ச பெருந்தோட்ட மக்களுக்கு, அவர்களின் வாழ்க்கைநிலையினை, வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக புதியதொலை நோக்கோடு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அமைச்சு எனது அமைச்சாகும்.

பல சவால்களுக்கு மத்தியில் அமைச்சு தோற்றுவிக்கப்பட்டதற்கான நோக்கத்தினை நோக்கி 3 வருடங்கள் பயணித்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

இலங்கைநாட்டின் பொருளாதாரத்தை ஈட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெருந்தோட்ட மலையகமக்கள் இந்தநாட்டின் பிரஜைகள் எனினும் கடந்த காலங்களில் பெயரளவிலேயே பிரஜைகளாக இருந்தனர். இந்த நல்லாட்சியில்தான் பிரஜைகள் என்பதற்கான அந்தஸ்தினை பெற்றுவருகின்றனர்.

சபாநாயகர் அவர்களே…..

2018ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தோட்ட சமுதாயத்தினர் வீடுகளை சொந்தமாக்கி கொள்வார்கள் என்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல வாழ்க்கைத் தரம் மிகக்குறைவாக உள்ள பெருந்தோட்டதுறை மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அவர்களை லயன் காம்பராக்களில் இருந்து தனிவீடுகளுக்கு மாற்றுவதோடு அதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு 25000 வீடுகள் வழங்கப்படும் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இத்தகைய முன்மொழிவுக்காக நிதியமைச்சருக்குநான் நன்றி கூறுகிறேன்.

இதுவரைகாலமும் இந்தமக்களுக்கு ஒரு துண்டு நிலமும் சொந்தமாக வழங்கபடவில்லை. வரலாற்றில் முதல் தடவையாக பெருந்தோட்டங்களில் கட்டப்படும் தனி வீடுகளின் உரிமையை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சபாநாகயர் அவர்களே…

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் தலவாக்கலையில் 71 குடும்பங்களுக்கும் கௌரவ பிரதம மந்திரி அவர்களினால் ஹுலந்தாவையில் 25 குடும்பங்களுக்கும், காணி உரித்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அமைச்சரவை அனுமதி வழங்கிய 2864 வீடுகளுக்கான தூய காணி உறுதிகள் (உடநயச வவைடந னநநனள)வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு மேலதிகமாக 3760 வீடுகளுக்கும் காணி உறுதியினை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதன் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நல்லாட்சி அரசாங்கம் இதுவரை 6720 பயனாளிகளுக்கு காணி உறுதிகள் வழங்க அனுமதி வழங்கியிருப்பது பெருந்தோட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டமக்கள் அனைவருக்கும் தனி வீடுகளுடன் காணி உறுதி பெற்றுக் கொடுப்பதே எமது எதிர்ப்பார்ப்பு.

சபாநாயகர் அவர்களே…..

எனது அமைச்சினூடாக 2016ம் ஆண்டுவரை 2835 வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டு 2535 வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன. இந்த கட்டிட நிர்மானத்தின் முன்னேற்றம் பல்வேறு மட்டங்களில் காணப்படுகின்றது. இவை துரிதமாக நிறைவு கட்டத்தை அடையும்.

இந்த வீடமைப்பு திட்டங்களை அரசியல் நோக்கத்திற்காக வாக்கு பலத்தை அதிகரித்து கொள்வதற்காக கடந்த காலத்தைப்போல நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் மாத்திரம் முன்னெடுக்கவில்லை. மலையக மக்கள் வாழ்கின்ற நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, களுத்துறை, குருநாகல், கொழும்பு ஆகிய 12 மாவட்டங்களிலும் வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றேன்.

இந்த வீடமைப்பு திட்டங்களின்போது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. இன்று பெருந்தோட்டபுறங்களில் மண்சரிவு அபாயங்களுக்குள்ளான, மண்சரிவு அபாயம் ஏற்படுமென எதிர்வுகூறப்படுகின்ற குடியிருப்புக்கள் ஏறத்தாழ 6000 வரை காணப்படுகின்றது. எனினும் அதற்கான முன்னுரிமை அடிப்படையிலேயே நிர்மாணித்து வருகின்றோம்.

இந்த வீடமைப்பு திட்டங்கள் உள்நாட்டு நிதியினால் நிர்மானிக்கப்படுவதற்கு மேலாக இந்திய நிதி உதவியினாலும் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் முன்மொழியப்பட்ட 4000 இந்திய வீடமைப்புத் திட்டம் 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது முதலாவது கட்டமாக1134 வீடுகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது.

இரண்டாவது 2வது கட்டத்திற்கான 2866 வீடுகளுக்கான வேலைதிட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்திய வீடமைப்பு திட்டமானது கடந்தகால ஆட்சியாளர்களினால் நுவரெலியா, பதுளை மாவட்டத்திற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. எமது முன்மொழிவின் அடிப்படையில் இந்திய வீடமைப்பு திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மத்திய ஊவா மாகாணங்களில் உள்ள 5 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளோம். நுவரெலியா 1316, கண்டி 400, மாத்தளை 300, பதுளை 700, மொனராகலை 150 என்ற அடிப்படையில் நிர்மாணிக்கப்பட இருக்கின்றது.

அத்தோடு 10000 வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்தியவம்சாவளி மக்களுக்காக இந்திய அரசாங்கம் வழங்கும் இத்தகைய உதவிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இந்த 10000 வீடுகள் நுவரெலியா 4850, பதுளை 1150, கண்டி 1100, மாத்தளை 450, மொனராகலை 200, கேகாலை 700, இரத்தினபுரி 750, காலி 100, மாத்தறை 100, களுத்துறை 250, குருநாகல் 200, கொழும்பு 150 என்றவாறு 12 மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட இருக்கின்றது.

கடந்த காலங்களில் அமைச்சராக இருந்தவர்கள் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்ச தனி வீடுகளையும், அதற்கான காணி உறுதிகளையும் பெற்றுக் கொடுத்திருந்தால்கூட இன்று பெரும்பாலானவர்கள் தனி வீடுகளிலும் சொந்த காணியிலும் வாழக்கூடிய சூழல் உருவாகியிருக்கும்.

சபாநாயகர் அவர்களே….

வீடமைப்பு திட்டத்திற்கு அப்பால் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம்.

2017ம் ஆண்டு 1640 குடியிருப்புகளுக்கான கூரை தகடுகளை மாற்றப்பட்டுள்ளது.

650 மலசலகூடங்கள், 23 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

80 குடிநீர் திட்டங்கள், 500 பாதைஅபிவிருத்தி, மைதான அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக 15 பெருந்தோட்ட வைத்திசாலை வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

பெருந்தோட்ட புறங்களில் உள்ள சிறார்களின் போசாக்கினை அதிகரிக்க செய்யும் வகையில் எல்லா தோட்டங்களுக்கும் தோட்ட முகாமைத்துவத்தின் ஊடாக ஊட்ட சத்துள்ள பிஸ்கட் வழங்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.

எமது அமைச்சின் மூலமாக வீடமைப்பு திட்டத்தினை பெரும் சவாலுக்கு மத்தியிலேயே முன்னெடுத்துவருகின்றோம்.

வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அமைச்சுக்கு கீழாக அரச நிறுவனங்கள் எதுவும் இல்லாத நிலையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினை மாத்திரம் தங்கியிருக்க வேண்டிய நிலையே உள்ளது.

மலையகத்திற்கான அபிவிருத்தியினை துரிதபடுத்தும் வகையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஒன்றினை உருவாக்குவதற்கு முயற்சித்துவருகின்றேன். அதற்கு இந்த உயரிய சபையின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

பெருந்தோட்ட கம்பனிகள் நிலத்தை விடுவிப்பதற்கு குறைந்த அளவினாலான ஒத்துழைப்பையே வழங்குகின்றது.

மாற்று நடவடிக்கையாக இதுவரை காலமும் கட்டப்பட்ட ஒப்பந்தகாரர்களை முன்னிலைப்படுத்திய திட்டத்திற்கு பதிலாக பயனாளிகளினால் கட்டும் முறையினை முன்னெடுத்து வருகின்றோம்.

3 வருடத்தில் இத்தகைய அடைவ மட்டத்தினை அடைவதற்கு வழங்கியது போலவே எதிர்வரும் காலங்களிலும் எம்முடைய இலக்கினை அடைய இந்த சபையின் ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் எதிர்ப்பார்த்து விடைபெறுகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *